அப்பா – விமர்சனம்

ஒவ்வொரு மகனும் மகளும் அப்பா என்ற சொல்லைக் கேட்டதும் ஒரு கம்பீர உணர்வு வரும். அப்பா என்ற திரைப்படம் அந்த கம்பீரத்தை மேலும் மெருகேற்றும்.
அப்பாக்கள் மீதான மரியாதையை அதிகப்படுத்தும். ஆனால், எல்லா அப்பாக்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்பதையும், கௌரவத்திற்காக தங்களின் கனவைதங்கள் குழந்தைகள் மேல் திணித்து அவர்கள் கனவுகளை தகர்த்துவிடுகிறார்கள் என்பதையும், அதே சமயம் ஒரு அப்பா நினைத்தால் தன் மகனையோ அல்லதுமகளையோ இந்த சமூகத்தை நேசிக்கும் உன்னதமானவர்களாக உயர்த்த முடியும் என்பதையும் உணர்வுபூர்வமான காட்சிகளோடு நம் கண்முன் எடுத்து வைக்கிறது ‘அப்பா’.
மூன்று அப்பாக்களைப் பற்றி பேசுகிறது ‘அப்பா’ திரைப்படம். சமுத்திரக்கனி (தயாளன்) – ஒரு நடுத்தர வர்க்க அப்பா. நேர்மையான சிந்தனை, சமூகத்தை நேசிக்கும் பண்பு, மனிதர்கள் மீது வைக்கும் நம்பிக்கை, விளம்பரம் காட்டி பணத்தை சுரண்டும் கல்வி நிறுவனங்கள் மேல் உள்ள கோபம், சூழ்நிலைகளை சமாளிக்கத் தெரிந்த பொருமை எனஒரு ஆச்சரிய மனிதராய்… பல அப்பாக்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியராய் வருகிறார்.
தம்பிராமைய்யா (சிங்கபெருமாள்) – தன் ஒட்டுமொத்த கனவுகளையும் தன் குழந்தை மீது திணிக்கும் ஒரு ஸ்டிரிட்டான அப்பா. நான்கு மணி நேரம் மட்டுமே தூக்கம், மீது இருபது மணி நேரம் படிப்பு என தன் மகனை டைம் டேபுள் போட்டு படிக்க வைப்பவர். சமூகத்தில் இருக்கும் வெற்று கௌரவத்திற்காக மகனை வளர்த்து அவனது சுதந்திரத்தை சிறையில் தள்ளும் ஒரு ஆர்வக்கோளாரான அப்பா.
நமோ நாராயணா (நடுநிலையான்) – எந்த வம்புக்கும் போகக்கூடாது என்று தனக்கு இருக்கும் தாழ்வு மனப்பாண்மையை தன் மகன் மீதும் செலுத்தும் ஒரு அப்பா. யாருக்கு என்ன நடந்தா என்ன? நாம சத்தமே இல்லாம இருக்க வேண்டும் என்ற கொள்கையை உடையவர். அதை மகனுக்கும் கற்றுக்கொடுப்பவர்.
படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல, அதை தாண்டி சமூகத்தில் பல விஷயங்கள் இருக்கிறது. சாதனை என்பது அதிக மதிப்பெண் வாங்குவது மட்டும் அல்ல, மாணவன் எந்தத் துறையை நேசிக்கிறானோ அதில் சாதிக்க அவனைத் தூண்ட வேண்டும், ஒரு அப்பா அவனுக்கு தோல் கொடுத்து அவன் உயரப் பறக்க உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தை ஆழமாய் சொல்கிறது அப்பா. தன் பிள்ளைகளை புரிந்து கொள்ளாத அப்பாக்களின் நிலையையும், அப்பாக்களிடம் தன் கனவுகளை சொல்ல முடியாமல் தவிக்கும் மாணாவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக சொல்ல முடியாத துயர நிலைக்கு மாறிவிடுவதையும் இதயம் கனக்க விவரிக்கிறது அப்பா.
தன் மகன் ஒரு பெண்ணைப்பார்த்து சலனப்படும் நேரம், ஒரு அப்பாவாக சமுத்திரக்கனி அந்த பெண்ணை சந்தித்து அவளை வீட்டுக்கு அழைத்து காஃபி கொடுக்கும் காட்சிஆச்சரியம். தன் மகனையும் அந்தப் பெண்னையும் உரையாடிக்கொள்ள அனுமதித்து, தன் மகனிடம் ‘பெண் என்பது ஒரு எதிர் பாலினம்… அவ்வளவு தான், ஒரு விஷயத்தை மூடி மூடி வைக்கும் போது தான், அது நமக்குள் அழுக்கை சேர்த்துவிடும். மனம் விட்டு பேசினால் எல்லாம் சரியாகும்’ என்று சொல்வது சிந்திக்க வைக்கிறது. அப்பாக்களின் சிந்தனை இப்படி இருந்தால்… அது நம் சமூகத்தில் பல சுவாதிகளை காப்பாற்றும்.
நீச்சல் துறையில் சாதனை படைக்க நினைக்கும் தன் மகனை உற்காகப்படுத்தி கின்னஸ் சாதனையை சாத்தியமாக்குகிறார். ஒரு இஸ்லாமியக் குடும்பத்தை சேர்ந்த தன் மகனின் தோழி முதல் மதிப்பெண் வாங்குகிறார், விவசாயத்தைப் பற்றி படிக்க நினைக்கும் அவருக்கு வழி காட்டுகிறார். அம்பேதகர் நகரில் இருந்து படிக்க வரும் ஒரு பெண்ணை, ஒடுக்கப்பட்ட சமூக என ஒதுக்காமல், அவரையும் அவரது கனவுகளையும் ஊக்கப்படுத்துகிறார். பார்ப்பதற்கு சின்ன உருவமாக இருக்கும் ஒருவரை அவரின் கவிதைகளைக் கொண்டு உயர்த்தி அடையாளப்படுத்துகிறார். இப்படியாக தன் மகனை மட்டுமல்ல, அனைவரும் அப்பா என அழைக்கும் தகுதியை திரையில் அடைந்திருக்கிறார் சமுத்திரக்கனி.
தொலைந்துபோன தன் மகன் வருவான் என்ற நம்பிக்கை ஒட்டிக்கொண்டிருக்க, தன் மகன் கிடைத்ததும் அவர் உணர்ச்சி வசப்படும் காட்சி படத்தின் உச்சம். இயக்குனராக மட்டும் அல்ல நடிகராகவும் கண்களை ஈரமாக்கி இதயத்தை நெகிழ வைக்கிறார் சமுத்திரக்கனி. மனைவியோடு வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற பொருமையையும் படத்தில் காட்டுகிறார் சமுத்திரக்கனி.
உன்னதமான இளையராஜாவின் இசை படத்தின் பலம். தேவையில்லாத சப்தங்களை குறைத்து ஒரு தெளிந்த நீரோடை போல காட்சிகளின் கூடவே பயணிக்கிறது இசை. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு இயல்பாக மட்டுமல்லாமல் கதையோடு பயணிக்க உதவி செய்கிறது. சண்டைக்காட்சிகள் இல்லை, டூயட் பாடல்கள் இல்லை, கமர்ஷியல் படத்துக்கு தேவையான மசாலாக்கள் எதுவுமே இல்லை. ‘அப்பா’ படத்தைப் பார்க்க இதைவிட ஒரு காரணம் வேண்டுமா. கமர்ஷியல் கலவைகள் இல்லை என்றாலும், சுவாரஸ்யமான காட்சிகளுக்கு படத்தில் பஞ்சமில்லை.
அப்பா – ஒரு பாடம்