அமெரிக்காவில் 5 வார குழந்தையை தாக்கிய இந்திய தாய் கைது

வாஷிங்டன்,
அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் வசித்து வருபவர் ரிங்குபென் பட்டேல் (வயது 25). இந்தியரான இவருக்கு பிறந்து 5 வாரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று உள்ளது.ரிங்கு பென் பட்டேல், தனது குழந்தையை தாக்கி அதன் மார்பு எலும்பினையும், காலையும் முறித்து விட்டார்.
இது தொடர்பாக ஆம்புலன்சை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர், எனது குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது என புகார் செய்தார். அதைத் தொடர்ந்து ஆம்புலன்சு வந்தது. ஆம்புலன்சில் வந்தவர்கள் குழந்தையை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அந்தக் குழந்தை, சமூக சேவை மையத்தின் பாதுகாப்பில் வைத்து பராமரிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக ரிங்கு பென் பட்டேலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். என்ன காரணத்துக்காக குழந்தையை அவர் தாக்கி காயப்படுத்தினார் என்பது தெரியவில்லை.