ஆக்கப்பூர்வமான விமர்சனம் : ஐகோர்ட் நீதிபதி வலியுறுத்தல்

”நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பு குறித்து விமர்சனங்களை கூறலாம்; ஆனால், அது ஆக்கப்பூர்வமானதாக, நன்கு ஆராயப்பட்டு தெரிவிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்,” என, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, அபய் ஓகா கூறினார்.

மஹாராஷ்டிர மாநிலம் தானேயில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, அபய் ஓகா பேசியதாவது:நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பு குறித்து, சரியாக ஆராயாமல், பலர் விமர்சனம் செய்கின்றனர். மற்ற துறைகளைப் போலவே, நீதிமன்ற தீர்ப்பிலும் சில தவறுகள் இருக்கலாம்.

ஆனால், நீதிமன்ற தீர்ப்பு குறித்த விமர்சனங்கள், ஆக்கப்பூர்வமானதாக, நன்கு ஆராயப்பட்டு தெரிவிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் நீதிமன்றங்கள் தீர்ப்பு அளிக்கும்போது, அது தன் வரம்பை மீறுவதாக கூறக் கூடாது.

பல்வேறு கோணங்களில் விசாரித்த பின்பே, நீதிமன்றங்கள் தீர்ப்பு அளிக்கின்றன. நாட்டில், நீதிபதிகளின் பற்றாக்குறையே, வழக்குகள் அதிகம் தேங்குவதற்கு காரணம். அமெரிக்காவில், 10 லட்சம் மக்களுக்கு, 50 நீதிபதிகள் உள்ளனர்; ஆனால் இங்கு, 17 அல்லது 18 நீதிபதிகளே உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.