கபாலி – விமர்சனம்

உலகம் முழுக்க ரஜினி ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பில் வெளியாகி உள்ளது சூப்பர் ஸ்டார் நடித்துள்ள கபாலி. இயக்குனர், தொழில் நுட்பக்கலைஞர்கள், நடிகர்கள் என ஒரு இளைமைக் கூட்டணியுடன் களமிறங்கி உள்ளார் ரஜினி. இவர்களுடன் நரைத்த முடியுடன் வந்தாலும் இளைமையாகவே இருக்கிறார் ரஜினியும்! முற்றிலும் மாறுபட்ட களம்,  உழைக்கும் மக்களுக்கான அரசியலை பேசும் வசனங்கள் என ஒரு புது வகையான ரஜினி படம் தான் கபாலி.
பல வருடங்களுக்கு பிறகு மலேசிய சிறையிலிருந்து வெளியே வருகிறார் கபாலி (ரஜினி). மலேசியாவில் நசுக்கபடுகிற தமிழர்களுக்கு அவர்களது உரிமைகளை பெற்றுத் தரும் தலைவராக உருவெடுத்த கபாலி சிறையில் இருந்த நேரம் பல கேங்ஸ்டர் கும்பல்கள் அதிகரித்துவிடுகிறது. வெளியே வந்தவுடன் கடத்தல் தொழில் செய்யும் டான்களை ஒரு கைப்பார்க்கிறர் கபாலி, அதே சமயத்தில் தன் மனைவியையும் மகளையும் கொன்றவர்களையும் தேடிவருகிறார்.
தீய சக்திகளை தட்டிக்கேட்கும் கபாலி வெளியே வந்ததால் கடத்தல் தொழில்கள் அனைத்தும் முடங்குப்போகிறது. கபாலி பல நல்ல விஷயங்களை செய்வதால், மலேசிய போலிசும் கபாலிக்கு உதவியாக  இருக்கிறது. இதனால் எதிரிகள் கபாலியை கொலை செய்ய ஒருவரை நியமிக்கிறார்கள். அவர் தான் யோகி (தன்ஷிகா).
தான் நடத்தி வரும் பள்ளி மாணவர்களிடம் தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சந்தர்ப்பம் கபாலிக்கு கிடைக்கிறது. மலேசிய உழைக்கும் தமிழ் மக்களுக்கான தலைவராக தமிழ் நேசன் (நாசர்) இருந்தது தெரியவருகிறது. ஆங்கிலேயர் தோட்டத்தில் சீனர்களுக்கு அதிக கூலியும், தமிழர்களுக்கு குறைவான கூலியும் வழங்கப்பட்ட நிலையில், தமிழ் மக்களுக்கான குரல் கொடுத்து சமத்துவமான நிலையை உருவாக்குகிறார் கபாலி. இதை அறிந்த தமிழ் நேசன் கபாலியை அழைத்து பாராட்டியதோடு தன்னை அவரோடு சேர்த்துக்கொண்டதை சொல்கிறார் கபாலி.
தமிழ் நேசன் நல்லவராக இருப்பதால் அவரது கேங்கில் போதைப்பொருள் மற்றும் பெண்கள் சமாச்சாரங்களில் தன் ஆட்கள் ஈடுபட கூடாது என கண்டிக்கிறார். இதனால் வீரசேகரன் (கிஷோர்) அவரை கொலை செய்கிறார். தமிழ் நேசன் இடத்துக்கு அடுத்த தலைவராக உருவெடுக்கிறார் கபாலி. இதை வீரசேகரனால் தாங்க முடியாமல் கபாலியை கொல்ல திட்டமிடுகிறார். கபாலியின் நண்பனும், தமிழ் நேசனின் மகனுமான தமிழ் மாறனை இதற்கு பயன்படுத்துகிறார் வீரசேகரன். தமிழ் மாறனுக்கும் கபாலிக்கு ஏற்படும் சண்டையில் தமிழ் மாறன் இறந்துவிடுகிறார். இதற்காகவே கபாலி சிறை செல்கிறார் என்பது பின்னர் தெரிகிறது. அதே நேரத்தில் கர்பிணியாக இருந்த கபாலியின் மனைவி குமுதவள்ளியையும் கொன்றுவிட்டார்கள் என்றே நினைக்கிறார் கபாலி.
காபாலியை கொலை செய்ய பின்தொடரும் யோகிக்கு கபாலி தான் தன் தந்தை என்ற உண்மை தெரியவருகிறது. பின்னர் தன் மனைவியையும் தமிழகம் வந்து மீட்கிறார் கபாலி. கபாலியை காலி செய்ய மலேசியாவில் உள்ள எல்லா கேங் லீடர்களும் திட்டம் தீட்டுகிறார்கள். கபாலி அவர்களை எப்படி காலி செய்கிறார் என்பது படத்தின் மீதி காட்சிகளில் உள்ளது.
கபாலியாக வரும் ரஜினி தான் ஒரு சூப்பர் ஹீரோ தான் என்பதை காட்சிக்கு காட்சி தன் அசத்தல் நடிப்பால் நிரூபிக்கிறார். இன்னும் பத்து படங்களுக்கு மேல் நடிக்கும் சுறுசுறுப்பு ரஜினியிடம் உள்ளது. இளமையாக வரும் ரஜினி கூலி உயர்வைப்பற்றி பேசும் காட்சி அற்புதம். சந்தோஷ் நாராயணனின் ‘நெருப்புடா…’ பின்னணி இசை தெறித்து எழ ரஜினியின் நடையும் அசைவுகளும் ரசிகர்களுக்கு விருந்து. ஆனால், ஸ்லோமோஷன் எஃபெக்ட்ஸ் போட்டு பல மணி நேரம் அதற்கு செலவிடாமல் இயல்பான ரஜினியாக வருவதும் ஒரு தனி அழகுதான்.
ராதிகா ஆப்தே சில காட்சிகளே இருந்தாலும் சிறந்த நடிப்பு. அவர் பேசும் சில வசனங்களும் ஆழமாகவே இருக்கிறது. நீண்ட வருடங்களுக்கு பின் கணவரை சந்திக்கும் காட்சியில் அசத்தல் நடிப்பு. படிய வாரிய தலையில் மல்லிகைபூவோடு தோற்றத்திலும் கூட அழகாகவே இருக்கிறார் ராதிகா ஆப்தே. தன்ஷிகா சரியான தேர்வு. அவர் ஹேர் ஸ்டைலும் உடையும் கச்சிதமாய் பொருந்துகிறது. நடிப்பிலும் கூட ஆச்சரியப்படுத்துகிறார்.
கிஷோர் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. கூர்மையான நடிப்பு… கொடுத்த வேலையை கச்சிதமாய் செய்திருக்கிறார். தினேஷ், ஜான் விஜய், ரித்விகா என நடிகர் பட்டாளமே ரஜினியை சுற்றி உள்ளது. அனைவரும் அவரவர் வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். ரஜினியை எதிர்க்கும் மலேசிய வில்லன், ஒரு வில்லன் போலவே இல்லாமல் இருப்பது பெரிய மைனஸ். ரஜினிக்கு ஏற்ற வகையில் சண்டைக்காட்சிகளை திறமையாக அமைத்திருக்கும் அன்பு – அறிவு பாராட்டுக்குறியவர்கள்.
பல கோடி செலவில் செட் போட்டு அதில் ரஜினியை கொண்டு நிறுத்தி ஒரு நாயகியுடன் டூயட் பாட வைக்கும் படமாக கபாலி இல்லை. சந்திரமுகி வடிவேலுவின் காட்சிகள் போல குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகளும் இல்லை.
இது ரஜினி படமாக இல்லாமல் ரஞ்சித் படமாகவே இருக்கிறது. இருந்தும் ரஜினியை ரசிக்க பல காட்சிகளை அமைத்திருக்கிறார் பா.ரஞ்சித். ரஜினிக்காக கதை அமைக்காமல், தன் கதைக்குள் ரஜினியை நடிக்க வைத்திருக்கும் பா.ரஞ்சித்தை தாராளமாய் பாராட்டலாம். ஆனால், அதே வேளையில் ரஜினி ஒரு கவர்ச்சிகரமான வியாபாரப் பொருளாகப் பார்க்கப்படும் நிலையில் கொஞ்சம் மசாலா சேர்த்திருக்கலாம்… தவறே இல்லை!
உழைக்கும் மக்களுக்கான உரிமைகளையும், உழைக்கும் மக்களின் குரலாய் ரஜினியை பேச வைத்திருப்பதும் பா.ரஞ்சித்தின் அசாதாரணமான வெற்றி. தான் அணிந்திருக்கும் கோட்டு சூட்டை காண்பித்து உடையும் கூட ஒரு வகை எதிர்ப்பு உணர்வு தான்! என்று ரஜினி பேசும் வசனம் உச்சகட்டம். இப்போது பல வகையான விமர்சனங்களை கபாலி பெற்றாலும் ரஜினிக்கு ஒரு மாஸ்டர் பீஸ் படம் என்பதில் சந்தேகமில்லை.
“மாடு மாதிரி உழைக்குறேன்… இழக்குறதுக்கு ஒன்னுமே இல்லை… நான் முன்னுக்கு வருவது தான் உனக்கு பிரச்சனைன்னா… நான் முன்னுக்கு வருவேண்டா!” என உழைக்கும் மக்களின் பிரதினிதியாக ரஜினியை ரஞ்சித் முன்னிருத்தி இருப்பது சூப்பர்!
கபாலி – கெத்துடா..!