குற்ற வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனை பெற்ற உ.பி. மந்திரி பதவி இழக்கிறார் வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட்டவர்

லக்னோ, குற்றவழக்கில் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட உத்தரபிரதேச மந்திரி கைலாஷ் சவுராசியா பதவி இழக்கிறார். இவர் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்டவர்.

உ.பி. மந்திரி உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் சட்டசபை தொகுதியின் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கைலாஷ் சவுராசியா. இவர் அந்த மாநில மந்திரிசபையில் குழந்தைகள் மேம்பாடு, சத்துணவு மற்றும் தொடக்கக் கல்வி மந்திரியாக உள்ளார்.

இவர் மீது 1995–ம் ஆண்டில் ஒரு தபால்காரரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது, அவரை மிரட்டியது என 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மிர்சாபூர் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கடந்த மாதம் 27–ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

3 ஆண்டுகள் தண்டனை இதில் கைலாஷ் சவுராசியாவுக்கு ஒரு குற்றத்துக்கு 3 ஆண்டுகளும், மற்ற இரு குற்றங்களுக்கு தலா 2 ஆண்டுகளும் தண்டனை விதித்து ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டது. அவருக்கு அன்று மாலையே ஜாமீனும் வழங்கப்பட்டது.

குற்றவழக்கில் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர் இன்னும் மந்திரியாக தொடர்ந்து வருகிறார். மாநில அரசு இதுகுறித்து தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. பதவி இழக்கிறார்

இதுகுறித்து உத்தரபிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹாவிடம் கேட்டபோது, ‘‘சட்டமன்ற உறுப்பினர் குற்றவழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெற்றால் தானாகவே அவரது உறுப்பினர் பதவி தகுதியிழந்துவிடும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் நடைமுறைகளை தேர்தல் கமிஷன் அமல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் சவுராசியா விவகாரத்தில் இந்த வாரத்திற்குள் தேர்தல் கமிஷன் தனது அறிக்கையை உத்தரபிரதேச சட்டமன்றத்துக்கு அனுப்பிவிடும்’’ என்றார்.

இதன் மூலம் அவர் விரைவில் எம்.எல்.ஏ. பதவியையும், மந்திரி பதவியையும் இழப்பார் என்று தெரிகிறது. சவுராசியா தனது எம்.எல்.ஏ. பதவியை இழந்தாலும் 6 மாதங்கள் வரை அவர் மந்திரியாக தொடரலாம் என்றும் உமேஷ் சூசகமாக தெரிவித்தார்.

மோடியை எதிர்த்து போட்டியிட்டவர் கைலாஷ் சவுராசியா கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அந்த மாநிலத்தில் தண்டனை பெற்று பதவி இழக்கும் 4–வது எம்.எல்.ஏ. ஆவார். ஏற்கனவே சமாஜ்வாடி எம்.எல்.ஏ. கப்தான்சிங் ராஜ்புத் ஒரு கொலை வழக்கிலும், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. உமாசங்கர் சிங், பா.ஜனதா எம்.எல்.ஏ. பஜ்ரங் பகதூர் ஆகியோர் எம்.எல்.ஏ. ஆன பிறகும் காண்டிராக்டர்களாக செயல்பட்டதால் லோக் அயுக்தா விசாரணையிலும் தண்டனை பெற்று பதவி இழந்தவர்கள்.