சிறார் குற்றவாளிகளுக்கான வயது வரம்பை 15 ஆக குறைக்க கேஜ்ரிவால் அரசு பரிந்துரை

சிறார் குற்றவாளிகளுக்கான வயது வரம்பை 15 ஆக குறைப்பதற்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் பரிந்துரைத்துள்ளார். இதுகுறித்து சட்டத்திருத்தம் கொண்டு வருவதை ஆராய அமைச்சர்கள் குழுவையும் அமைத்துள்ளார்.

டெல்லியில் இரண்டரை வயது பெண் குழந்தை உட்பட இரண்டு சிறுமிகள் சில நாட்களுக்கு முன்னர் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது. இந்நிலையில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அப்போது, டெல்லியில் பெண் களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு குறித்து விரிவாக ஆலோசனை நடத் தப்பட்டது. பின்னர் செய்தியாளர் களிடம் முதல்வர் கேஜ்ரிவால் கூறியதாவது:

மைனர் சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண் டனையை உறுதி செய்யும் வகை யிலும், சிறார் குற்றவாளிகளுக்கான வயது வரம்பை 15 ஆக குறைக்கவும் தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளலாமா என்று அமைச் சரவை கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதுகுறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தலைமையில் அமைச் சர்கள் குழு ஆய்வு மேற்கொள்ளும். இந்த அமைச்சர்கள் குழு இது குறித்து ஆராய்ந்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்கும். மேலும், டெல்லியில் பெண்களின் பாது காப்பு குறித்து ஆய்வு செய்ய விசாரணை ஆணையம் ஒரு வாரத் தில் அமைக்கப்படும். அத்துடன் டெல்லியில் பல்வேறு நீதிமன்றங் களில் நிலுவையில் உள்ள பலாத்கார வழக்குகளை விரைந்து முடிக்க பட்டியல் தயாரிக்கப்படும்.

உள்ளூர் போலீஸ் நிலையங் களின் விசாரணை, பெண்களுக்கு திருப்தி அளிக்காத நிலையில் அவர்களுக்கு எதிரான குற்றங்களை பதிவு செய்து விசாரணை நடத்த சிறப்பு போலீஸ் நிலையங்கள் அமைப்பது குறித்தும் அமைச்சர்கள் குழு ஆராய்ந்து பரிந்துரை அளிக்கும். அமைச்சர்கள் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்படும்.

வழக்குகளை விரைந்து முடிக்க புதிய நீதிமன்றங்கள் அமைக்கவும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வும் செலவு செய்வதற்கு டெல்லி அரசு தயாராக இருக்கிறது. வழக்குகளை விரைந்து முடிக்க விரைவு நீதிமன்றங்களை கூடுதலாக அமைப்பது குறித்து டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்துவோம்.

இவ்வாறு முதல்வர் கேஜ்ரிவால் கூறினார்.