ஜல்லிக்கட்டு சட்டம் சட்டசபையில் நிறைவேற்றம்

சென்னை: தமிழகத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவான, விலங்குகள் வதை தடுப்பு சட்டத்திருத்த சட்டம், சட்டசபையில் நேற்று, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏதுவாக, ‘1960ம் ஆண்டு, விலங்குகள் வதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) அவசர சட்டம், 2017’யை, கவர்னர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்தார். அதை சட்டமாக இயற்றுவதற்கான மசோதாவை, சட்டசபையில், முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று மாலை அறிமுகம் செய்தார். பின், சபையில், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின் விபரம்: கடந்த, 1960ம் ஆண்டு, பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின், இரண்டாம் பிரிவில், ‘டி’ என்ற உட்பிரிவில், ஜல்லிக்கட்டு சேர்க்கப்படுகிறது. பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை பின்பற்றும் நோக்கில், ஜன., முதல் மே மாதம் வரை, அரசால் அறிவிக்கும் நாட்களில், காளைகளை ஈடுபடுத்தி நடத்தப்படும் ஒரு நிகழ்வு என, அது பொருள்படும். இதில், வடமாடு, எருது விடும் விழா மற்றும் மஞ்சு விரட்டு ஆகியவையும் அடங்கும்.இச்சட்டத்தின் மூன்றாவது பிரிவு, உட்பிரிவுகளின் படி, தமிழக அரசு வரையறுக்கும் விதிகளின் அடிப்படையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். முதன்மை சட்டத்தின், 11வது பிரிவில், 3ம் உட்பிரிவில், புதிய உட்பிரிவு சேர்க்கப்படுகிறது. இதன்படி, நாட்டு காளை மாடுகள் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பிற்கு, ஜல்லிக்கட்டு அவசியமாகிறது.மேலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள, ’28 ஏ’ என்ற, புதிய பிரிவின்படி, அரசு வழிகாட்டு முறைப்படி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது, இனி குற்றம் ஆகாது.விலங்குகளுக்கு தேவையற்ற வதை மற்றும் தீங்கு ஏற்படுவதைத் தடுக்க, 1960ம் ஆண்டில், பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் (1960ம் ஆண்டு, மத்திய சட்டம் 59) இயற்றப்பட்டது. எனினும், ஜல்லிக்கட்டு போட்டி, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்கவும், உள்நாட்டு காளை மாடுகளின் இனவிருத்திக்கு உதவிகரமாக இருப்பதை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு அரசு, ஜல்லிக்கட்டுக்கு, மத்திய சட்ட அம்சங்களில் இருந்து, விலக்கு அளிக்க முடிவெடுத்துள்ளது.அதனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கேற்ப, 1960ம் ஆண்டு மத்திய சட்டம், 59யை, திருத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ‘விலங்குகள் வதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) அவசர சட்டம், 2017 ஜன., 21ல், கவர்னரால் பிறப்பிக்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த சட்டம், 21ம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக கருதப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது