தமிழகம் முழுவதும் 20,000 ரவுடிகளை வெளியேற்ற காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை

சென்னை: தமிழகம் முழுவதும் 20,000 ரவுடிகளை அவர்கள் வசிக்கும் இடங்களில் இருந்து வெளியேற்றுமாறு காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. சட்டமன்ற தேர்தலின் போது ரவுடிகளால் சட்டம் ஒழுங்குக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் வசிப்பிடங்களில் இருந்து அவர்களை வெளியேற்றும் படி காவல்துறை இயக்குநர் அசோக்குமாருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதனிடையே தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே 38 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மயிலாடுதுறையில் ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1,85,000 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சேலம் அருகே ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.5 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது.

சென்னை வியாசர்பாடியில் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த வெள்ள நிவாரண பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டிவனத்தை அடுத்த ஓமந்தூரில் ஜெயலலிதா படம் பொறித்த ஹெல்மெட் மற்றும் குக்கர்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.