திருமணம் ஆகாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் பிரச்சினை: கற்பழிப்பு புகாரை, மோசடி வழக்காக பதிவு செய்ய முடியாது டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு

புதுடெல்லி, திருமணம் செய்துகொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் நிலையில், கற்பழிப்பு புகார் வரும்போது, அதை மோசடி வழக்காக பதிவு செய்ய உத்தரவிட முடியாது என டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பொதுநல வழக்கு :
டெல்லி ஐகோர்ட்டில் அனில் தத் சர்மா என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் சாராம்சங்கள் வருமாறு:–

* 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட கற்பழிப்பு வழக்குகளில் ஆண்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதில்லை. இருப்பினும் குற்றம் சாட்டப்பட்ட ஆணின் குடும்ப உறுப்பினர்கள் அவமானத்துக்கு ஆளாகின்றனர்.

* கற்பழிப்பு வழக்குகளில் விடுதலை செய்யப்படுகிற ஒருவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி அவர் மீது பொய்ப்புகார் கூறியவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். கற்பழிப்பு வழக்கு கூடாது

* முதல் கட்ட விசாரணை நடத்தி, மருத்துவ பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பாகவே பெண்ணின் கற்பழிப்பு புகாரின் அடிப்படையில், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது.

* ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்கிறபோது, பெண் செய்கிற புகாரை கற்பழிப்பு குற்றமாக கருதி, அந்த வரையறைக்குள் வைக்க கூடாது.

* இணைந்து வாழ்கிறபோது பெண் கற்பழிப்பு புகார் செய்தால், அதை இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 420–ன் கீழ் வழக்காக பதிவு செய்ய வேண்டும். இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 376–ன்படி கற்பழிப்பு வழக்காக பதிவு செய்ய கூடாது.

தீர்ப்பு :
இந்த சாராம்சங்களை கொண்ட வழக்கு, டெல்லி ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ஜி.ரோகிணி, நீதிபதி ராஜீவ் சஹாய் எண்ட்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.விசாரணைக்கு பின்னர், வழக்குதாரரின் முறையீடுகளை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்ந்து, கற்பழிப்பு புகார் வரும்போது, அதை மோசடி வழக்காக பதிவு செய்யும்படி உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டனர். வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாறுபட்ட உறவுகள் :
தீர்ப்பில் நீதிபதிகள், ‘‘ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறபோது, அதை வழக்குதாரர் கூறியுள்ளபடி கற்பழிப்பு குற்ற வரையறைக்கு வெளியே வைக்க முடியாது. அப்படி செய்தால், அது திருமண அந்தஸ்தை வழங்கியது போலாகி விடும். சட்டம் அவ்வாறு செய்யும்படி கூறவில்லை. இணைந்து வாழும் உறவு, திருமண உறவிலிருந்து மாறுபட்டது என்பதே எங்கள் கருத்து’’ என கூறி உள்ளனர்.