நேஷனல் ஹெரால்டு வழக்கு விவகாரம்: சிறை நிரப்பும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டம்

நேஷனல் ஹெரால்டு வழக்கு விவகாரத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்ட மிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாளை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சோனியாவும் ராகுலும் டெல்லி நீதிமன்றத்தில் நாளை ஆஜராகின்றனர். அவர்கள் ஜாமீன் கோராத பட்சத்தில் இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்படலாம் என்று தெரிகிறது.

அன்றைய தினம் சிறை நிரப் பும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகி றது. இதற்காக டெல்லிக்கு அருகில் உள்ள உத்தரப் பிரதேசம், ராஜஸ் தான், பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து காங்கிரஸின் மாவட்டத் தலைவர்கள், தேசிய பொதுச்செயலாளர்கள், எம்.எல்.ஏக் கள் மற்றும் அனைத்து மாநிலங் களின் எம்.பி.க்கள் தங்களின் ஆதர வாளர்களுடன் தலைநகரில் குவி யும்படி ரகசிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் காங்கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறியபோது, ‘நீதிமன்ற ஆஜர் விவகாரத்தை வைத்து அரசியல் லாபம் அள்ள வேண்டும் என கட்சியின் உயர்நிலை தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதை, கடந்த வாரம் நீதிமன்றம் ஆஜராகும்படி உத்தரவிட்டபோதே செய்திருக்கலாம். சில மூத்த தலைவர்கள் பேச்சைக் கேட்டு அவகாசம் பெறப்பட்டுவிட்டது. இந்தமுறை கைதாகி ஜாமீன் மனுவை சற்று தாமதமாக அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

கடந்த வருடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடுத்திருந்த அவதூறு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப் பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர் ஜாமீன் மனுவை அளிக்காமல் கைதாகி திகார் சிறை சென்றார். இதனால் சிறையை சுற்றிலும் ஆம் ஆத்மி கட்சியினர் கூடி போராட்டம் நடத்தியதால் அவருக்கு அரசியல் லாபம் கிடைத்தது. அதே வழியை காங்கிரஸ் பின்பற்ற திட்டமிட்டு வருகிறது.

இதற்கிடையே, சோனியா, ராகுல் இருவருக்கும் சிறப்பு பாதுகாப்பு படையான எஸ்பிஜி பாதுகாப்பு அளிப்பதால் விசார ணையை விக்யான் பவன் அரங்கத்தில் மாற்றவும் வாய்ப்பிருப் பதாகக் கருதப்படுகிறது. பாது காப்பு பிரச்சினையை குறிப்பிட்டு இருவரின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்படவில்லை. எனினும், இதை நீதிமன்றமே கருத்தில் கொண்டு பட்டியாலா நீதிமன்றத்தில் இருந்து விக்யான் பவன் மாற்றவும் வாய்ப்புள்ளது.

இதற்காக எஸ்பிஜியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மனு செய்து விசாரணை இடத்தை மாற்றவும் வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. இதை எதிர்பார்த்து விக்யான் பவனிலும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.