மழையும் இல்லே; பறவையும் இல்லே வேடந்தாங்கல் சரணாலயம் ‘வெறிச்’

வட கிழக்கு பருவ மழை தாமதமாவதால், வேடந்தாங்கல் சரணாலயம், பறவைகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை, வனத்துறை பராமரித்து வருகிறது. அக்டோபர், இரண்டாவது வாரத்தில் இருந்து, பறவைகள் இங்கே வரத் துவங்கும். அதன்பின், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்; 2014ல், அக்., 27 முதல் பார்வையாளர் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு, வடகிழக்கு பருவ மழை இன்னும் துவங்காததால், வேடந்தாங்கல் களையிழந்து காணப்படுகிறது. இதனால், வனத்துறையினரும், பறவை ஆர்வலர்களும் கவலை அடைந்துள்ளனர்.
வனத்துறையினர் கூறியதாவது: பருவ மழை தாமதமானதால், வேடந்தாங்கல் ஏரி வறண்டு கிடக்கிறது. கடந்த சீசனில், சரணாலயம் திறக்கப்பட்ட போது, ஏரியில், 40 சதவீதம் தண்ணீர் இருந்தது.
குறைவான அளவு என்றபோதிலும், 2,000 பறவைகள் குவிந்திருந்ததால், சரணாலயம் திறக்கப்பட்டது; 2015 மே வரை, பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, ஏரி வறண்டிருப்பதால், ஒரு பறவை கூட வரவில்லை. 15 ஆண்டு களுக்கு பின், ஏரியை துார்வாரி, மழைக்காக காத்திருக்கிறோம்; அடுத்த வாரம் பருவமழை துவங்கும் என, கூறப்படுகிறது.
மழை பெய்தால், அருகேயுள்ள வளையபுத்துார் ஏரி நிரம்பி, அங்கிருந்து, வேடந்தாங்கலுக்கு தண்ணீர் வந்து விடும்; தீபாவளி நெருக்கத்தில், பறவைகளும் வந்து விடும். நவம்பரில் சரணாலயம் திறக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -