வட இந்தியர்களால் எரிக்கப்படும் ராவணனுக்கு ராஜஸ்தானில் கோயில்

ராமாயண காவியத்தில், நாயகன் ராமனின் மனைவி சீதாவை கவர்ந்து சென்ற ராவணன், பின்னர் ராமனால் கொல்லப்படுகிறார். ராவணன் கொல்லப்பட்ட தினத்தை வட இந்தியாவில் தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். தசரா பண்டிகையின் இறுதியிலும் ராவணனின் கொடும்பாவியை இங்குள்ள மக்கள் எரித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் இதற்கு நேர்மாறாக ராஜஸ்தான் மாநிலத்தில் ராவணனுக்கு கோயில் கட்டி மக்கள் வணங்கி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரில் உள்ள மார்வார் கோட்டையைச் சுற்றியுள்ள மலைப்பகுதி சாந்த் போல் என்று அழைக்கப்படுகிறது. இங்கு கடந்த 2009-ம் ஆண்டு, ‘மஹாதேவ் அமர்நாத் விகாஸ் பரியாவரன் சமிதி‘ என்ற பெயரிலான ஓர் அறக்கட்டளை சார்பில் ராவணனுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இதில் சிவலிங்கத்துக்கு முன் ராவணன் அமர்ந்து லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது போல் 6 அடி உயரம் கொண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலில் உள்ள மற்றொரு சிலை புகழ்பெற்ற மக்ராணா மார்பிள் கல்லில் பத்து தலைகள் மற்றும் இருபது கைகளுடன் ராவணன், கயிலாயம் செல்வது போல் உள்ளது. இதற்கு உருவ மாதிரியாக, தமிழகத்தின் சிவகாசியில் பல ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்ட ஒரு சுவரொட்டியை ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோயிலின் தலைமை நிர்வாகி கமலேஷ்குமார் தாவே ‘தி இந்து’விடம் கூறும்போது, “ஜோத்பூரில் மார்வார் சாம்ராஜ்யம் உருவாவதற்கு முன் இங்குள்ள மண்டோர் நகரை தலைநகராகக் கொண்டிருந்தது மண்டோக் அரசு. இதன் இளவரசியான மண்டோதரியைத்தான் ராவணன் மணம் முடித்திருந்தான். இந்த நகரம் தற்போது கிராமமாக சுருங்கி இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. ராஜஸ்தானில் மக்கள் தங்கள் மாப்பிள்ளைகளை கடவுளுக்கு இணையாக வணங்கும் வழக்கம் உள்ளது. மேலும் பழங்காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து இங்கு குடியமர்ந்த நாங்கள் பஞ்ச திராவிடர்களில் ஒருவரான சிர்மாலி பிரிவின் முத்கல் பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள். எங்களின் மூதாதையர்களில் ஒருவர்தான் சிவ பிராமணனான ராவணன். எனவே, பலவகை கோயில் உள்ள இந்த வளாகத்தில், ராவணனுக்கும் ஒரு கோயில் கட்டினோம்.

சீதையை தூக்கிச் சென்றதைத் தவிர ராவணன் வேறு எந்தத் தவறும் செய்யவில்லை. எங்களை பொறுத்தவரை அது ஒரு தவறு அல்ல. காரணம், நம் சகோதரியின் மூக்கை யாராவது அறுத்தால் நாம் பார்த்துக் கொண்டிருப்போமா? ஒரு பாசமுள்ள சகோதரனாக ராவணன் செய்ததில் எந்தத் தவறும் இல்லை. எந்தவொரு பெண்ணின் மீதும் தனது சுண்டு விரல் கூட பட்டுவிடக் கூடாது எனக் கருதும் ராவணன், சீதையை சுற்றியிருந்த பூமியுடன் சேர்த்துதான் தூக்கிச் சென்றான்” என்றார்.

ஜோத்பூரில் ராவணனுக்கு கோயில் கட்டும் அறிவிப்பு 8 ஆண்டு களுக்கு முன் வெளியானபோது, விஎச்பி, பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் கடுமையாக எதிர்த் தன. இந்த எதிர்ப்பை மீறி இங்கு கோயில் கட்டப்பட்டது. இதை விட பழமையான ஒரு ராவணன் கோயில், உ.பி.யின் கான்பூரில் உள்ளது. தசரா பண்டிகையின் இறுதி நாளையொட்டி வடஇந்திய மாநிலங்கள் முழுவதிலும் நேற்று முன்தினம் ராவணனின் கொடும் பாவிகள் எரிக்கப்பட்டன.