விசாரணைக்கு உடனடி தடை: அன்புமணி கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கடந்த 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றினார். அப்போது உத்தரப் பிரதேசம் ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி, மத்தியப் பிரதேசம் இந் தூரில் உள்ள மருத்துவக் கல்லூ ரிக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பான வழக்குகள் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத் தில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகளில் தன் மீதான குற்றப் பத்திரிகை, முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அன்புமணி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று நீதிபதி சுரேஷ் கெய்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புமணி மீதான வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.

மனு குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐ-க்கு உத்தரவிட்ட நீதிபதி அடுத்த விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.